Monday, November 29, 2010

டாட்டா :எது வாழ்வின் அடிப்படை உரிமை?


மக்கள் பணத்தை சுரண்டும் தொழில் அதிபர்கள் பட்டியலில் டாட்டா நிறுவன அதிபரும் தற்போது வெட்ட வெளிச்சமாக தனது உரையாடல் மூலம் சேர்ந்துள்ளார்.

"வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன் ஆலோசனை நிறுவனத் தலைவர் நீரா ராடியாவுடன் தான் உரையாடியதை பதிவுசெய்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தனிமனித உரிமை உள்ளிட்ட வாழ்வின் அடிப்படை உரிமைகளை இந்த உரையாடல் பதிவு விவகாரம் பாதித்துள்ளதாக டாடா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். "

மக்கள் பணத்தை உயர் பதவி அமைச்சர் ,ஊடகம் என்ற பெயரில் பணத்துக்காக எதுவும் செய்ய துடிப்பவர்களுடன் சேர்ந்து டாட்டா நிறுவனத்தை வளர்ப்பது தான் அடிப்படை உரிமையோ ?

நன்றி தினமணி

Friday, October 15, 2010

தென் திருப்பதியில் வழிப்பறி?

புரட்டாசி மூன்றாம் சனி அன்ன்றைக்கு பெருமாளை தரிசனம் செய்தால் நல்லது என்று நவதிருப்பதி கோவில்களுக்கு குடும்பத்துடன் புறப்பட முடிவுசெய்தோம்.

அதன்படி நவ வரிசைப்படி ஒவ்வொரு திருத்தலங்களாக தரிசித்து வந்தோம்.இந்த ஒன்பது கோவில்களில் ஏழு கோவில்களில் கட்டணம் செலுத்தி மட்டுமே தரிசனம் செய்ய முடிந்தது .இலவச தரிசனங்கள் இந்த கோவில்களில் இல்லை.மூலவர் தரிசனம் 2 ரூபாய் , சிறப்பு தரிசனம் 10 ரூபாய் கட்டணம் .

கட்டணம் வசூல் செய்யும் ஏழு கோவில்களில் இரண்டு கோவில்களை பிரபல டி.வீ.எஸ். நிறுவனம் பராமரிப்பு பணிகளை செய்து வருகிறது .

எனக்கு ஒன்று மட்டும் கடைசி வரை புரிய வில்லை!!
ஏன் இந்த கட்டண வசூல் ?
இறைவனை இல்லாதவர்கள் தரிசிக்க கூடாது என்றா ?
கோவில் வளர்ச்சிக்கு என்றா ?

விருப்ப பட்டவர்கள் தானாக காணிக்கை செலுத்த முன் வரும் போது ஏன் இந்த கட்டணம் ?

ஆந்திர மாநிலம் திருப்பதியில் கூட இலவச தரிசன சேவை என்று உண்டு.நம் தமிழக தென் மாவட்ட தென் திருப்பதியில் ஏன் இந்த வழிப்பறி?

Wednesday, October 13, 2010

குடும்ப படம்


உண்மைய சொன்னால் வழக்கு

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!
ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.

தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''

படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!

ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...

வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?

நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?

ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.
இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது.

இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.

தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!

"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!

நன்றி - தினமணி
இந்த கட்டுரையை வெளியிட்ட தினமணி நாளிதழ் மீது பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது .

Saturday, September 25, 2010

தடுப்பூசி பன்றிக் காய்ச்சல் நோயை தடுக்குமா ?

இதுவரை தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் நோயால் இறந்தவர் எண்ணிக்கை கிட்டத்தட்ட பத்து நபர்கள் .

இந்த நோயால் பாதிப்பு வராமல் தடுக்க தற்போது தடுப்பூசி போடப்படுகிறது

இதற்கு பரிந்துரை செய்தது எந்த மருத்துவ ஆராய்ச்சி விஞ்ஞானி ?

தடுப்பூசி திட்டத்துக்காக தமிழக அரசு ஒதுக்கிய தொகை 300 கோடி .

நாளிதழில் எதிர் கட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா விட்ட ஒரு அறிக்கைக்கு பதில் சொல்லும் விதமாக முதல்வர் உடனடியாக ருபாய் 300 கோடி தொகையை ஒதுக்கியதன் பின்னணி என்ன ?மக்கள் நலமா அல்லது அரசியலா ?

திட்டத்தால் பலன் அடைவது சாதாரண மனிதனா அல்லது மருந்து உற்பத்தி செய்யும் முதலாளிகளா ?

தமிழக சட்டசபையில் முதலில் விவாதிக்க வேண்டிய விஷத்தை எந்த விவாதமும் இல்லாமல் நடைமுறை படுத்த வேண்டிய அவசியம் என்ன ?

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எத்தனை சதவிகிதம் பேருக்கு நோய் வராது?

இதற்கு முன் திருவள்ளூர் மாவட்டத்தில் தட்டம்மை ஊசி போட்ட நான்கு குழந்தைகள் இறந்ததுபோல்அசம்பாவிதங்கள் நடந்தால் யார் பொறுப்பு ஏற்பார்கள் ?தமிழக அரசா அல்லது மருந்து உற்பத்தி நிறுவனமா ?

தடுப்போசி போடும் முன் தங்களது குடும்ப மருத்துவரை ஆலோசனை செய்து கொள்வது நல்லது .

வாசகர்கள் தங்களது மேலான கருத்துக்களை கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்யவும்

Monday, September 20, 2010

அதுஎன்ன அலைக்கற்றை ஊழல்

அலைக்கற்றை ( Spectrum ) :
மின்காந்த அலைகள் (Electro Magnetic Waves )அப்படின்னு கேள்விப்பட்டிருப்பீங்க. சொல்லப்போனா கண்ணுக்குத் தெரியாத அந்த அலைகளால தான் இன்றைக்கு உலகமே இயங்கிட்டிருக்கு. ஆமாங்க . மின்காந்த அலைகள Radio wave, Micro Wave, Infrared, light ,Ultraviolet, X-ray,Gamma rays. அப்படின்னு பிரிச்சிருக்காங்க . இதுல நம்ம எல்லோர்கிட்டயும் இருக்குற செல்போன் பயன்படுத்துற அலைகள் முதல்ல வர்ற ரேடியோ அலைகள் தான். செல்போன் மட்டும் இல்லாம விரைவிலேயே நான் வேலைக்குப் போகப்போற FM , அப்புறம் டிவி இந்த மாதிரியான சாதனகளுக்குத் தேவையான அலைகளும் இந்த ரேடியோ அலைகளே.! இந்த அலைக்களைப் பற்றி விரிவா தெரிஞ்சிக்க விருபுறவுங்க இங்க சொடுக்குங்க.

சரி இங்க ஊழல் நடந்தது அப்படின்னு சொல்லுறது எதுல அப்படின்னு பார்த்தா 2008 ல 2G ஏலம் விட்டுருக்காங்க. அதுலதான் நடந்தது அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க . இன்னும் நிரூபிக்கப்படலை. உங்களுக்கு அந்த ஏலம் பற்றி தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு . கொஞ்ச நாள் முன்னாடி தான் மூன்றாம் தலைமுறை அலைபேசிகளுக்கான ஏலம் நடந்தது. அதில் மொத்த ஏலத்தொகை 67,718.95 கோடிகளாகும். இந்த மூன்றாம் தலை முறைக்கான ஏலம் இப்ப நடக்கும் அப்ப நடக்கும் இழுத்து அடிச்சுக்கிட்டே வந்தாங்க . அப்புறம் May 19,2010 அன்னிக்கு முடிஞ்சது. இதே மாதிரி முறையா செய்ய வேண்டிய ஏலத்த யாருக்குமே தெரியாம நடத்திட்டாங்க அப்படின்னு தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராஜா மேல குற்றம்சாட்டிருக்காங்க.!

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் :
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைகளுக்கான ஏலம் கடந்த 2008 ல நடந்தது . அதுல அவுங்க முதலில் வருவோர்க்கு முன்னுரிமை அப்படிங்கிற விதிமுறையப் பயன்படுத்தி உரிமம் வழங்கிட்டோம் அப்படின்னு சொல்லிருக்காங்க. அதும் இல்லாம 2001 ல என்ன விலைக்கு விற்கப்பட்டதோ அதே விலைக்கு வித்திருக்காங்க . இதுதான் இவுங்க ஊழல் பண்ணிருக்காங்க அப்படிங்கிற சந்தேகத்த வலுப்படுத்துது. அதே மாதிரி அந்த அலைகற்றைகள அடிமாட்டு விலைக்கு வாங்கின நிறுவனங்கள் எவ்ளோ சம்பாரிதாங்க தெரியுமா ..? Swan Telecom & Unitech Wireless என்ற கம்பனி 13 வட்டங்களுக்கான லைசென்சே சுமார் 1537 கோடிகள் கொடுத்து வாங்கிருக்காங்க. கொஞ்ச நாளுக்குப் பிறகு இவுங்க இவுங்களோட பங்குகளில் கொஞ்சத்த 2 பில்லியன் டாலர்களுக்கு வித்திருக்காங்க. இது அவுங்க வாங்கினதோட ஒப்பிடும் போது 700 மடங்கு அதிகம் . இதே மாதிரி மத்த கம்பெனிகள் எவ்ளவுக்கு வித்தாங்க அப்படிங்கிறத இங்க மற்றும் இங்க சொடுக்கி தெரிஞ்சுகோங்க.

முதலில் வருவோர்க்கு முன்னுரிமை :
முதலில் வருவோர்க்கு முன்னிரிமை அப்படிங்கிற நிபந்தனைகளுக்கும் TRAI அமைப்பிற்கும் சம்பந்தமே இல்ல . அதவிட ஒரு பொருள் 2001 வித்த விலைக்கேதான் 2008 லயும் விற்கும் அப்படிங்கிறது எந்த விதத்துல அப்படின்னு தெரியல ..? ஏன்னா 2001 ல இந்தியாவுல 4 மில்லியன் மொபைல் இணைப்புகள் மட்டுமே இருந்தது . ஆனா 2008 ல 300 மில்லியன் மொபைல் இணைப்புகள் இருந்திருக்கு. ஏற்கெனவே சொன்னது மாதிரி Swan Telecom நிறுவனம் 1537 கோடிகள் கொடுத்து லைசென்ஸ் வாங்கிருக்காங்க , ஆனா சில மாதங்களிலேயே 4500 கோடிகளுக்கு அவுங்களோட 45 சதவீத பங்குகள வித்திருக்காங்க. இத மேலும் விரிவா படிக்க இங்க கிளிக்குங்க. இந்த லிங்க் படிச்சாவே நிறைய உண்மைகள் உங்களுக்குத் தெரியவரும். ஆனா இதுல ஊழல் நடந்துதா இல்லையா அப்படின்னு இன்னும் விசாரிச்சுட்டு இருக்காங்க.?!?

Source:
http://koomaali.blogspot.com/2010/09/spectrum-scam.html

நாங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே

அன்றாட வாழ்வில் செல்போன் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகிவிட்டதைப்போல பெரும் இம்சையாகவும் மாறிவிட்டது. இப்போதெல்லாம் 5 ரூபாய்க்குக் கூட செல்போனில் ரீசார்ஜ் செய்யும் வசதி வந்துவிட்டது. ஆனால், பெருமைப்படக்கூடிய விஷயம் அல்ல அது. சட்டைப்பையில் 5 ரூபாயைக்கூட வைத்திருக்கவிடாமல் பறித்துக் கொள்ள செல்போன் நிறுவனங்கள் வகுத்துள்ள உத்தியாகத்தான் கருத வேண்டும்.
மக்களின் செல்போன் மோகத்தைப் பயன்படுத்தி செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் பெரும் கொள்ளையே அடிக்கின்றன. செல்போன் எண்களை வணிக நிறுவனங்களுக்குத் தந்து தேவையற்ற அழைப்புகளுக்கு வழிவகை செய்வது ஒருபுறம் என்றால், சேவை என்ற பெயரில் எதற்கெடுத்தாலும் காசு பறிப்பது மற்றொரு புறம். ரிங்டோனை தேர்வு செய்யக் கட்டணம், அதைப் பதிவிறக்கம் செய்யக் கட்டணம்.


"விருப்பமானவங்க கால் செய்யும்போது அவங்க விரும்பும் பாடலைக் கேட்கச் செய்யுங்க' என்று விளம்பரம் செய்து காலர் டியூனை செயலாக்கம் செய்யக் கட்டணம் என எதற்கெடுத்தாலும் கட்டணம்தான். பேலன்ஸில் உள்ள தொகையில் திடீர் திடீரென |30 குறையும். வாடிக்கையாளர் சேவைப் பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டால், "எஸ்.எம்.எஸ். பேக் உங்கள் எண்ணுக்கு தவறுதலாகத் தேர்வாகிவிட்டது. அடுத்த மாதம் இந்தச் சேவையை நீக்கிவிடுகிறோம்' என்பார்கள்.

கட்டணம் குறைந்துவிட்டது குறித்துக் கேட்டால் குறைந்தது குறைந்ததுதான் என வருத்தமேயின்றிச் சொல்வார்கள். பிடித்தமானவர்கள் போன் செய்யும்போது காலர் டியூனால் மகிழ்விக்கலாம் என்றால், "இந்த காலர் டியூனை காப்பி பண்ண எண் ஒன்றை அழுத்துங்கள்' என்ற விளம்பரத்தைத்தான் அடிக்கடி கேட்க வேண்டியிருக்கும். சில நிறுவனங்கள் தங்களுக்குச் செல்போன் கோபுரம் இல்லாத பகுதியில் இணைப்புக் கிடைக்காததை மறைத்து, "நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கின்றன.

50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 42.50 ரூபாய்க்குத்தான் பேசலாம். எப்பேர்ப்பட்ட பகல் கொள்ளை இது. முழுத் தொகையும் கணக்கில் ஏறும் வசதி குறித்து பல மாதங்களுக்கு முன்னரே தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஆலோசனை செய்தது. ஆனால், இன்னும் நடைமுறைக்கு வந்தபாடில்லை. செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் "மனசு வைத்தால்' மட்டும் அவ்வப்போது முழு "டாக் டைம்' வசதி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.

அது மட்டும் செல்போன் நிறுவனங்களுக்கு கட்டுபடி ஆகிறதா என்ன? "ஆட்-ஆன்' எண்களைத் தேர்வு செய்து குறைந்த கட்டணத்தில் பேசுங்கள் என்ற சலுகையை அனைத்து நிறுவனங்களுமே அளிக்கின்றன. ஆனால், அதற்கு மாதந்தோறும் தனி வாடகை.

50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து, குறைந்த அழைப்புக் கட்டணத்தில் பேச வேண்டுமானால் தனியாக ஒரு தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். பூஸ்டர் கார்டு, போனஸ் கார்டு என ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொருவிதமாக ஏமாற்றுகின்றன. இப்போது அனைத்து செல்போன் நிறுவனங்களும் இணையதள சேவையிலும் இறங்கியுள்ளன. அதிலும் செல்போன் பயன்படுத்துவோருக்கு சாதகமான அம்சங்கள் இல்லை.

இலவச "டவுண்லோட்', "அன்லிமிடெட் பிரவுசிங்' என்றெல்லாம் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்தாலும் "பேலன்ஸ்' தொகை மொத்த மொத்தமாக காலியாவதுதான் மிச்சம். காரணம் கேட்டால் உரிய பதில் கிடைக்காது. மாதந்தோறும் வாடிக்கையாளர் எண்ணிக்கையைப் பெருக்குவதிலேயே குறியாக இருக்கும் நிறுவனங்கள், அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில்லை.

இதனால், செல்போனில் பேசும்போது தெளிவாகக் கேட்காதது, பேசிக் கொண்டிருக்கும்போதே பாதியில் இணைப்புத் துண்டிக்கப்படுவது என பல சிரமங்கள். மொத்தத்தில் செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் அனைத்துமே சேவையைப் பொறுத்தவரை தொடர்பு எல்லைக்கு வெளியேதான் உள்ளன.