Saturday, September 10, 2011

இவர்களால்தான் இந்த உலகம் இயங்குகிறது!

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும். ஆனால், இன்று எல்லா வீடுகளிலும் ஆண்களும் பெண்களும் படித்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தை பள்ளிக்குச் செல்லும் முன்பாகவே எழுத்துகளை, ஆங்கிலம், தமிழ் என அறிமுகம் செய்கிறார்கள். பொம்மைகளை, படங்களைக் கொடுத்துக் கற்பிக்கிறார்கள். குழந்தைகளின் வீட்டுப் பாடங்களைக்கூட சொல்லித் தருவதும், தானே போட்டுத் தருவதுமான வேலைகளையும் செய்யும் பெற்றோர் எண்ணிக்கை பெருகிவிட்டது. அவர்களே குழந்தைகளுக்கு ஆசிரியர்களாகிவிடுகிறார்கள். இதனாலேயே பல பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எதிரிகளாக, எதிர் ஆளுமைகளாக மாறிப்போகிறார்கள்.

இன்றைய நவீன தொழில்நுட்பம், தகவல் தொடர்பு வளர்ச்சி எல்லாமும் இப்போது தாய், தந்தை, ஆசிரியர் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது. பாடம் முழுவதையும் சொல்லித்தர குறுந்தகடுகள் வந்தாகிவிட்டன. வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் அதே பாடங்களை அப்படியே நடத்தும் அளவுக்கு இதன் தரம் இருக்கிறது. மேலும் ஒரு வகுப்பறையில் இருந்துகொண்டு, பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் பாடம் நடத்தும் வகையில் கணினியுடன் கூடிய வகுப்பறைகள் இன்று அறிமுகமாகத் தொடங்கிவிட்டன. அப்படியானால் யாரை ஆசிரியர் யாரை நல்லாசிரியர் எனக்கொள்வது?

ஒரு மாணவர் பள்ளியை விட்டு வெளியே சென்று சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எத்தனை ஆசிரியர்களின் பெயரை நன்றியுடன் நினைவுகூர்கின்றாரோ, எத்தனை பேரை அவர் திசை நோக்கி வணங்க நினைக்கின்றாரோ, தன் குழந்தைகளை ஒரு பள்ளியில் கொண்டு சேர்க்கும்போது தனக்கு வாய்த்த ஆசிரியர் போல தன் மகன், மகளுக்கும் கிடைக்கமாட்டாரா என்று எந்த ஆசிரியரை நினைத்து மனம் ஏங்குகின்றதோ அவர்கள் மட்டுமே நல்லாசிரியர்கள் என்று ஒரு பட்டியலைப் போட முடியும். இந்த அளவுகோலில் வருவோர் மட்டுமே நிஜமான, நிச்சயமான நல்லாசிரியர்களாக இருப்பார்கள். இவர்களில் பலர் நிச்சயமாக மத்திய, மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்களாக இருக்க மாட்டார்கள். ஆனாலும் அவர்களைப் போன்றவர்களால்தான் இந்தச் சமூகத்தின் ஒவ்வொரு தலைமுறையும் நன்றி சொல்லிக்கொண்டு முன்னேறிச் செல்கிறது.

இந்தவிதமான ஆசிரியர்களை ஒரு மனிதன் பின்னாளில் நினைக்கக் காரணம் என்ன என்பதை எண்ணிப் பார்க்கும்போது, ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண் பெறும் வகையில் பாடத்தைச் சொல்லிக் கொடுத்தவரா அல்லது அவரது வகுப்பு வந்தாலே பயங்கர ஜாலி என்பதாலா அல்லது அவர் அன்பாகப் பழகினாரா, எதனால் அவரை மனம் தேடுகிறது?

எல்லா ஆசிரியர்களும் கற்பித்தல் பணியைச் செய்தாலும் ஆசிரியர்களை மூன்று வகையாகப் பிரிக்க வேண்டியிருக்கிறது. அறிவை வழங்குபவர், அறிவைப் புகட்டுபவர், அறிவைத் துலக்குபவர்.

அறிவை வழங்கும் ஆசிரியர்கள் வெறுமனே பாடப்புத்தகங்களில் இருக்கும் பாடத்தைத் திரும்பவும் அதே அளவில், அதே தரத்தில் மாற்றமின்றி மாணவர்களுக்குக் கொடுக்கிறார்கள். அறிவைப்புகட்டுபவரின் பணி இன்னும் சுவையானதாக , பிடிக்காத உணவையும் ஊட்டி விடும் சாமர்த்தியம் கொண்டதாக இருக்கிறது. ஆனால், மூன்றாவது வகை ஆசிரியர்கள் ஒரு மாணவரின் உள்ளே இருக்கும் திறமையை அவரே பார்க்கும்படியாகத் துலக்கி, பளபளப்பாக்கி விடுவார். அந்தத் தன்னொளி வழியில் அந்த மாணவர் நடந்து வாழ்க்கையில் பலபடி மேலே செல்வார். அப்படியாக ஒவ்வொருவரும் தனது அறிவின் ஒளியைத் துலக்கிக் காட்டியவர்களை எண்ணிப் பார்க்கிறார்கள். இது பள்ளி வகுப்பறையில் மட்டும்தான் நடக்க வேண்டும் என்பதில்லை. இவர்கள்தான் உண்மையிலேயே குரு. ஒரு மனிதனை அவருக்கே அடையாளம் காட்டுவதுதான் குருவின் பணியாக இருக்கிறது.

இத்தகைய ஆசான்கள்தான் ஒரு மனிதன் தன் தாய் தந்தையை மதித்துக் காப்பாற்ற வேண்டும் என்பதும், சமூகத்தில் அடுத்தவருக்கு இடையூறு இல்லாமல் அறவாழ்வு வாழ்வதும், அனைவரையும் அன்பு செய்வதும் நமக்கு உள்ளே எப்போதுமே இருந்து வருகின்ற ஒளி என்பதை, அறிவைத் துலக்கி வெளிப்படுத்திக் காட்டுகிறார்கள் .

இவர்களால்தான் இந்த உலகம் இயங்குகிறது!

Friday, January 7, 2011

வரவேற்கிறோம் புதிய கல்லூரியை ...


தமிழக அரசு ஆண்டுதோறும் சில அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மாவட்டம் தோறும் திறக்கிறது .அந்த வகையில் எங்கள் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் கிராம பகுதியில் ஒரு கல்லூரி உதயமாகிறது .

இன்றைய தமிழக ஆளுநர்,ஆளுநர் உரையில் இதை தெரிவுத்துள்ளார். இனி வரும் காலங்களில் பின் தங்கிய ஏழை எளிய மக்கள் குடும்பத்தில் இருந்து பல படித்த நாட்டை உயர்த்தும் கைகள் தயாராகிறது...

வரவேற்கிறோம் எங்கள் புதிய கல்லூரியை !!

"நாமும் வளர்வோம் நாட்டையும் உயர்த்துவோம் "

யாரை நம்பி அடுத்த தலைமுறை ? கலாம்


நம் ஒவ்வொரு செயலும் தனிமனித முன்னேற்றம் மட்டும் அல்லாது நம் தேசத்தின் முன்னேற்றம்.அந்த வகையில் நம்மில் பலரின் முன்னோடியான டாக்டர்
அப்துல் கலாம் அவர்களின் கருத்துக்களுக்கு செயல் வடிவம் கொடுக்க முயல்வது நம் நாட்டின் வளர்ச்சிக்கு நம்மை கொண்டு சொல்லும்.

நேற்று ஒரு தனியார் நிர்வாக மேலாண்மை நிறுவன ஆண்டு விழாவில் பேசிய கலாம் "திறமை, உயர் தொழில்நுட்பப் பொருள்கள் மற்றும் சேவையை வழங்கும் அடுத்த தலைமுறை தொழில் முனைவோரை இந்தியா எதிர்நோக்கி உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்

நேற்று ஒரு தனியார் நிர்வாக மேலாண்மை நிறுவன ஆண்டு விழாவில் பேசிய கலாம் "திறமை, உயர் தொழில்நுட்பப் பொருள்கள் மற்றும் சேவையை வழங்கும் அடுத்த தலைமுறை தொழில் முனைவோரை இந்தியா எதிர்நோக்கி உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்
இந்தியா இயற்கை வளத்தை மட்டும் அல்லாமல் மகப் பெரிய மனித வளத்தையும் பெற்றுள்ளது, ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளை முடித்துவிட்டு 30 லட்சம் பேர் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளி வருகின்றனர்.

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 முடித்துவிட்டு வேலைதேடுவோர் 70 லட்சம் பேர்.

இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஒரு கோடி மாணவர்கள் வேலை தேடுகின்றனர். இருந்தபோதும் போதிய திறன் பெற்ற பணியாளர் கிடைப்பது தொடர்ந்து மிகப் பெரிய சவாலாக உள்ளது. இந்த இடைவெளியைப் போக்க கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். கலந்துரையாடல் முறையில் சுயமாக கற்றுக் கொள்ளுதல், சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையிலும் கல்விமுறை மாற்றப்பட வேண்டும்.

அப்போதுதான் படித்து முடித்து வெளிவரும் இளஞர்களை வேலை தேடுபவர்களாக அல்லாமல், வேலை கொடுப்பவர்களாக மாற்ற முடியும்.

Monday, January 3, 2011

என்று தனியும் எங்களுக்கு வழங்கும் இலவசம் !

இந்த நாட்டில் ஏழை, எளிய மக்கள் இருக்கும் வரை இலவச உதவிகள் வழங்கப்படும் என்ற தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் பேச்சு வரவேற்கத்தக்கதா அல்லது வருந்தத்தக்கதா என்று தெரியவில்லை. உழைப்புக்குப் பெயர் பெற்ற தமிழர்கள் தற்போது இலவசம் என்ற பெயரில் அரசிடம் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

÷இலவசம் என்றால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிடைப்பதை விடக் கூடாது என்ற நோக்கத்கோடு, அனைத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற மனப்பான்மை தற்போது தமிழக மக்களிடம் அதிகரித்துவிட்டது.

÷இந்த மனப்போக்கை மனதில் கொண்ட அரசியல் கட்சியினர் இலவசத் திட்டங்களை அறிவித்து, அதன்மூலமாக ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று கணக்கிடுகிறார்கள். அதற்கு முன்னோட்டமாகத்தான் முதல்வரின் இந்தப் பேச்சும் அமைந்திருக்கிறது. ÷இலவசங்களை வழங்கும் அரசுகள் இந்த இலவசங்கள் உண்மையில் மக்களுக்குப் பயன்படுகிறதா என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டத்தில், பலர் தங்களது வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்த போதிலும் அரசு கொடுத்த டி.வி.யை வாங்கி, அதைக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டனர். மேலும், சிலர் வீட்டினுள் பத்திரப்படுத்தியுள்ளனர்.

÷இதனால், யாருக்கு என்ன பயன் ஏற்பட்டுவிட்டது. மின்சாரச் செலவு கூடுதலானதும், கேபிள் இணைப்புக்குக் கட்டணம் செலுத்தியதோடு, குறிப்பிட்ட சில டி.வி. சானல்களின் ரேட்டிங் உயர்வுக்கு மட்டுமே இந்தத் திட்டம் உதவியுள்ளது. அதேநேரத்தில், இலவச டி.வி.க்காக வழங்கப்பட்ட தொகையைத் தொழிற்துறையில் செலவிட்டிருந்தால் பல குடும்பங்கள் வாழ்ந்திருக்கும்.

÷உதாரணமாக, 1,500 குடும்ப அட்டைகள் கொண்ட ஒரு கிராமத்தில் இலவச டி.வி.க்காக அரசு தோராயமாக ரூ. 37.50 லட்சம் செலவிடுகிறது. இந்தத் தொகையின் மூலமாக அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயப் பொருள்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றும் தொழிற்சாலைகளைத் தொடங்கும்பட்சத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்வதோடு, நூற்றுக்கணக்கானவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புக் கிடைத்திருக்கும். விவசாயிகளுக்கும் தங்கள் தொழில் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்.

÷இலவசமாகக் கொடுக்கப்படும் பொருள் நமது வரிப் பணத்திலிருந்தும், நமது தலையை அடமானமாக வைத்து நபார்டு வங்கி, உலக வங்கி மற்றும் தனியார் நிதிநிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தொகைதான் என்பது நமக்கு மறைக்கப்படுகிறது.

இதை உணர்ந்தவர்களும், பணக்காரர்களும் அரசின் இலவசங்கள் நமது பணம்தான் என்பதால் அதைப் பெறுவதிலும் தயக்கம் காட்டுவதில்லை. இதனால்தான் சென்னையில் சுனாமி தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையைப் பெறுவதற்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் உயிரிழந்தவர்களில் பணக்காரர்களும் இடம் பெற்றிருந்தனர்.

÷இலவசம் என்பது ஒரு நாட்டின் கெüரவக் குறைச்சல் என்பதை பள்ளியில் நாம் படிக்கும்போது பாட்டி கதை மூலமாக விளக்குவார்கள். அந்தக் கதை இப்போது நமக்குத் தேவையாக இருக்கிறது. ""ஒரு மன்னன், பக்கத்து நாட்டு மன்னனைச் சந்தித்தபோது, தனது நாட்டைப்பற்றிப் பெருமையாகக் கூறினான். தனது நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் அன்னசத்திரங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. அதில், தினமும் ஏராளமானவர்கள் உணவருந்துகிறார்கள். அதேபோல, என்னைப் பார்ப்பதற்காக தினமும் வரும் ஏழைகளுக்குப் பொன்னையும், பொருளையும் வாரி வழங்குகிறேன். அதை அவர்கள் தினமும் பெற்றுச் செல்கிறார்கள். இதைப் பெறுவதற்காக அவர்கள் என் அரண்மனை முன் தினமும் காத்திருப்பார்கள்'' என்று பெருமைப்பட்டான்.

÷அதற்கு மற்றொரு மன்னன், ""என் நாட்டில் பிச்சைக்காரர்கள் இல்லை. அவரவர்கள் உழைக்கிறார்கள், சாப்பிடுகிறார்கள். அதற்குத் தேவையானவற்றை அரசு செய்து கொடுக்கிறது என்றானாம். அதன்பிறகுதான், தற்பெருமை பேசிய அரசனுக்கு நமது குடியின் கீழிருக்கும் மக்களைப் பிச்சைக்காரர்களாக்கியது தனது தவறு என்பதை உணர்ந்தான்'' என்று பாட்டி கதை கேட்டிருக்கிறோம்.

÷இப்போது நமது நாட்டில் அன்னசத்திரங்களும், அரசின் இலவசத் திட்டங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இது அரசின் வளர்ச்சியல்ல. மக்களின் வறுமைக்கோடு உயர்ந்துகொண்டே செல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

÷தமிழகத்தில் 2010-ம் ஆண்டு கணக்கின்படி தோராயமாக 6.63 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களில், தற்போது தமிழக அரசு வழங்கும் இலவச, வேஷ்டி சேலை வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு வழங்கப்படுவதாகும். அந்தக் கணக்கின்படி பார்த்தால் தமிழகத்தில் 3 கோடியே 11 லட்சத்து 23 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன. இவ்வளவு மக்களும், அவர்களின் குடும்பங்களும் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பதாகத்தானே தமிழக அரசு கூறுகிறது.

÷இவ்வாறு மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கும்போது, அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் திட்டங்களைத் தீட்டினால்தான் அவர்களின் வாழ்வு உயரும். அதைவிட்டு, இலவசத் திட்டங்கள் தீட்டப்பட்டு, அதற்காக வாங்கப்படும் கடன் தொகை அரசை நெருக்கும்போது அரசே திவாலாகும் நிலை ஏற்படும்.

÷இவ்வாறு திவாலாகும் நிலையைத் தடுக்க அரசு கையிலெடுத்திருக்கும் மதுபான விற்பனை, மணல் விற்பனை போன்றவற்றால் மக்களின் உடல்நலமும், இயற்கை வாழ்வாதாரமும் கெட்டு, தமிழக மக்கள் உண்மையில் இலவசங்களையும், அரசின் நிரந்தர உதவியையும் மட்டுமே எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.

÷கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தில் வழங்கப்படும் மானியத் தொகை குறைவால், ஒரு வேளை உணவாவது நிம்மதியாகச் சாப்பிட்ட ஏழைத் தொழிலாளிகூட, தான் வாங்கிய கடனுக்கு கந்து வட்டி கட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அதே நிலை தொடரும்போது, குடியிருக்கும் வீட்டை நிலத்துடன் விற்றுவிட்டு அரசின் இலவசத்தை மட்டுமே எதிர்பார்க்க வேண்டிய நிலைதான் ஏற்படும்.

÷எனவே, ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்ற எண்ணத்தைத் தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கைவிட்டுவிட்டு, ஏழைகள் இலவசங்களைப் பெறுவதற்காகப் பிறந்தவர்கள் அல்லர் என்பதை உணர்ந்து அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் திட்டங்களைத் தீட்ட முன்வந்தால்தான் தமிழகம் உண்மையான வளர்ச்சியை எட்டும்.

நன்றி தினமணி